ஜீவ ஸமாதி - Jeeva Samadhi
பகுத்தறிவுவாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் நண்பர் ஒருவர் நேற்று என்னை சந்திக்கையில் ஒரு கேள்வியைக் கேட்டார். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி சமாளிக்கிறீர்களே? இந்தக் கேள்விக்கு சரியான பதில் தர முடியுமா?
நான் சொன்னேன் ஐயா சாக்கு போக்கெல்லாம் நான் சொல்வதில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன். உங்களுக்குக் கற்றுத்தரப்படாததாலோ அல்லது உங்களால் இயாலதது என்பதாலோ அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். சரி கேள்வி என்ன?
ஐயா, ஜீவ சமாதி என்று சொல்கிறீர்களே, அது தற்கொலை அல்லவா? அதற்கு உடந்தையாக, சாட்சியாக இருந்தவர்கள் கொலைகாரர்கள் தானே? உயிரோடு ஒருவரைப் புதைப்பது கொலைதானே? என்று கேட்டு விட்டு ஒரு நமட்டுச் சிரிப்பு வேறு சிரித்துக் கொண்டார். அவரைச் சொல்லி குற்றமில்லை. இன்றைய நடைமுறை சட்ட திட்டங்களின்படி அது தற்கொலை என்றே கொள்ளப்படும். உயிரோடு புதைப்பவர்கள் கொலைகாரர்களே என்று தீர்ப்பு சொல்லி விடுவார்கள். ஆனால் யோகிகள், சித்தர்கள், ஞானிகள் நிலை வேறு.
நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு ஸமாதி ஆவதில்லை. ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும்.
இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.
சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.
அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.
அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை. அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல.
இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். எனவே நண்பரே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல. அது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுணடு. அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மமைக விளக்கி அருளுவார்கள்.
- Unknown Author -
Comments
Post a Comment